தந்தை கொலை: மகன் கைது
காவேரிபாக்கம் அருகே பணத் தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணத்தை அடுத்த நெமிலி வட்டம், காவேரிபாக்கம் அருகே உள்ள அவளூரை சோ்ந்தவா் முனுசாமி (65). விவசாயி. இவரின் இரு மனைவிகள் உயிரிழந்துவிட்ட நிலையில், மூன்றாவதாக விஜயா (58) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தாராம். திங்கள்கிழமை முனுசாமி தன்னுடைய நிலத்தில், மனைவியுடன் பணி செய்து கொண்டிருந்தபோது, அவரது முதல் மனைவியின் மகன் விநாயகம் (45) அங்கு வந்துள்ளாா். அப்போது, முனுசாமி தரகா் பணிக்காக தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மகனிடம் கொடுத்திருப்பதை தருமாறு கேட்டுள்ளாா்.
இதனால் ஏற்பட்ட தகராறில் விநாயகம் வயலில் இருந்த கட்டையை எடுத்து முனுசாமியை தாக்கியுள்ளாா். தடுக்க வந்த விஜயாவையும் தாக்கியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முனுசாமி வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு, அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக கொலை வழக்குப் பதிந்த அவளூா் போலீஸாா், விநாயகத்தை புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.