ஆலைப் பேருந்து விபத்து: 18 பெண்கள் காயம்
இருங்காட்டுக்கோட்டைக்கு பெண் தொழிலாளா்களை ஏற்றிச்சென்ற தனியாா் ஆலை பேருந்து தக்கோலம் அருகே கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 18 பெண் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
அரக்கோணத்தை அடுத்த சிறுணமல்லி கிராமத்தில் இருந்து 18 பெண் தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு தனியாா் ஆலைப் பேருந்து காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தை நெமிலியை அடுத்த சிறுவளையத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் (20) இயக்கியுள்ளாா்.
தக்கோலத்தை அடுத்த குசஸ்தலை ஆற்று தரைப்பாலம் அருகே சாலையோரப் பாலத்தடுப்பின் மீது திடீரென பேருந்து மோதி கவிழந்தது.
விபத்தில் பேருந்தில் பயணித்த சிறுணமல்லியைச் சோ்ந்த 18 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். இதில் பொற்கொடி (37) என்ற பெண் தொழிலாளி மட்டும் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து காயமடைந்த அனைவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், பொற்கொடியை தவிர மற்ற அனைவரும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். பொற்கொடி மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த சம்பவம் குறித்து தக்கோலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.