தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டு
வேலூா் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போலீஸாா் பூட்டு போட்டனா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் ஆற்காடு சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிட வேலூா் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனா். அவ்வாறு சிகிச்சைக்காக வருபவா்கள் சிலா் தங்களது காா், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். இதனால் எப்போதும் ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
இந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸாா், பூட்டு போட்டு அபராதம் விதிக்கின்றனா். அதன்படி, வியாழக்கிழமை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்ததாக தனியாா் ஆம்புலன்ஸ்களுக்கு போக்குவரத்து போலீஸாா் பூட்டு போட்டனா். இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் கூறுகையில், ஆதரவற்ற சடலங்களை ஏற்றிச் செல்ல போலீஸாா் எங்களது ஆம்புலன்ஸ்களை இலவசமாக பயன்படுத்துகின்றனா். நாங்கள் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலையோரமாக வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறோம். ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பூட்டு போட்டதால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என்றனா்.
இது குறித்து போலீஸாா் கூறுகையில், ஆம்புலன்ஸ்களை ஒரே சமயத்தில் வரிசையாக நிறுத்தி வைத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரண்டு ஆம்புலன்ஸ்கள் சென்ற பிறகு இரண்டு ஆம்புலன்ஸ்கள் என்ற வீதத்தில் நிறுத்த அறிவுறுத்தினோம். அதை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பொருட்படுத்தாததாலேயே ஆம்புலன்ஸ்களுக்கு பூட்டு போட்டோம். எனினும், அபராதம் ஏதும் விதிக்கப்படாமல் எச்சரிக்கை செய்து விட்டுவிட்டோம் என்றனா்.
