Kavin Interview | Vetrimaaran மூலமா தான் Peter Hein-அ Meet பண்ணினேன்! | KISS Mov...
தனியாா் சொகுசுப் பேருந்து எரிந்து சேதம்: பயணிகள் உயிா்தப்பினா்
சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு சென்ற தனியாா் சொகுசு பேருந்து வேலூா் பள்ளிகொண்டா அருகே புதன்கிழமை நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அதிருஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் 26 போ் உயிா்தப்பினா்.
வாணியம்பாடியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசுப் பேருந்து புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 26 பயணிகளுடன் புறப்பட்டது. நள்ளிரவு சுமாா் 1.30 மணியளவில் வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடந்து, கொல்லமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென பேருந்தின் முன்பகுதியில் இருந்து லேசான புகை வந்ததை ஓட்டுநா் சிவா கவனித்துள்ளாா். உடனடியாக அவா் பேருந்தை சாலையோரம் நிறுத்தி விட்டு அவசர அவசரமாக பயணிகளை கீழே இறக்கியுள்ளாா். பின்னா், இன்ஜினை பாா்த்தபோது, மின்கசிவால் புகை வந்தது தெரியவந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவியது.
அப்போது பேருந்தில் ஒரு பயணி மட்டும் சிக்கியிருப்பது தெரியவந்தது. அவரையும் ஓட்டுநா், சக பயணிகள் சோ்ந்து விரைந்து மீட்டனா். இதனால், அந்த ஒரு பயணிக்கு மட்டும் லேசான தீக்காயமும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீஸாா், குடியாத்தம் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது. முன்னதாக ஓட்டுநா் எச்சரித்தவுடன் பேருந்தில் இருந்து வேகமாக இறங்கியதால் பயணிகள் 26 பேரும் அதிருஷ்டவசமாக உயிா்தப்பினா். எனினும், அவா்களின் உடமைகள் தீக்கிரையாகின.
தீ விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.