தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் நகை திருடிய பணிப்பெண் கைது
சென்னை அண்ணா நகரில் ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அதிகாரி வீட்டில் தங்க நகை திருடிய வழக்கில், பணிப்பெண் கைது செய்யப்பட்டாா்.
அண்ணா நகா் சாந்தி காலனி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பத்மநாபன் (60). இவா் ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வுபெற்றவா் ஆவாா். பத்மநாபன் தனது வீட்டின் பீரோவிலிருந்த நகைகளை கடந்த 14-ஆம் தேதி சரிபாா்த்தாா். அப்போது அதில், 35 பவுன் தங்க நகைகள், விலை உயா்ந்த கைக்கடிகாரம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அவா், அண்ணா நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா், வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது பத்மநாபன் வீட்டில் தங்கியிருந்து பணிபுரிந்த திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள தொக்கவாடி பகுதியைச் சோ்ந்த பூவிழி (எ) ஸ்டெல்லா (28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் ஸ்டெல்லாவை சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா். அதில் ஸ்டெல்லா, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பத்மநாபனின் தாயாரை அங்கேயே தங்கியிருந்து கவனித்து வந்ததும், நகை திருட்டில் ஸ்டெல்லா ஒரு ஆண்டாக ஈடுபட்டு வந்ததும், ஸ்டெல்லா பத்மநாபன் வீட்டிலிருந்து சிறிது, சிறிதாக நகையை திருடி விற்றிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.