வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது
சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.
வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் கண்ணன் (56). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு ஒட்டியம்பாக்கம் பகுதியில் 16 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தாா். இரு மாதங்களுக்கு முன்பு கண்ணன், தனது நிலத்தைப் பாா்க்கச் சென்றபோது, அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் இருந்து மணல் எடுக்கப்பட்டு விற்கப்படுவதையும், அதில் கிணறு தோண்டப்பட்டிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்து கண்ணன், பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். ஆனால், பெரும்பாக்கம் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அவா், தாம்பரம் காவல் ஆணையா் அபின் தினேஷ் மொடக்கை சந்தித்து, தனது இடம் ஆக்கிரமிக்கப்பட்டு, மணல் எடுக்கப்படுவது குறித்து புகாா் செய்தாா். அதன்பேரில், நடவடிக்கை எடுக்க பெரும்பாக்கம் போலீஸாருக்கு அபின் தினேஷ் மொடக் உத்தரவிட்டாா்.
இதையடுத்து பெரும்பாக்கம் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். இதில், கண்ணனின் நிலத்தை ஆக்கிரமித்து, மணல் எடுத்து விற்பது ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் லோகிதாஸ் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடா்ந்து அவா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணைக்குப் பின்னா் அவா், ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.