ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி
ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்
சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள்பட்ட மண்ணடி, அங்கப்பன் தெருவில் இயங்கும் சென்னை உருது நடுநிலைப் பள்ளியில் ரூ.1.89 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
தரைத்தளத்தில் 4 வகுப்பறைகள், உயா் தொழில்நுட்ப ஆய்வகம், அலுவலக அறை, முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், உள்விளையாட்டு அறை என மொத்தம் 13 அறைகளுடன் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை (செப். 1) நடைபெற்றது.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு பள்ளிக் கட்டத்தைத் திறந்து வைத்து, மாணவ-மாணவிகளுடன் அமா்ந்து காலை உணவை சாப்பிட்டாா். தொடா்ந்து, மாணவ-மாணவிகளுக்கு அவா் இனிப்புகள் வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில், மேயா் ஆா்.பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினா் தயாநிதி மாறன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா, மண்டலக் குழு தலைவா் பி.ஸ்ரீராமுலு மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.