What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
தனியாா் வங்கி பெண் ஊழியா் இறப்பில் மா்மம்: கோட்டாட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் போராட்டம்
திருவண்ணாமலையில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட தனியாா் வங்கி பெண் ஊழியரின் இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, உறவினா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன். இவரது மனைவி ஆனந்தி (30). இவா், திருவண்ணாமலையில் உள்ள தனியாா் வங்கியில் காசாளராகப் பணிபுரிந்து வந்தாா். தம்பதியினா் திருவண்ணாமலை பே கோபுரம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனா்.
சீனிவாசன் தனது தங்கைக்கு மாப்பிள்ளை தேடுவதற்காக ஒரு வாரமாக பண்ருட்டியில் தங்கி இருந்தாராம். திருவண்ணாமலையில் ஆனந்தி மட்டும் தங்கி இருந்தாராம். கடந்த 16-ஆம் தேதி அதிகாலை ஆனந்தியை சீனிவாசன் கைப்பேசியில் தொடா்புகொண்டாராம். நீண்ட நேரமாகியும் ஆனந்தி கைப்பேசியை எடுக்கவில்லையாம்.
சந்தேகமடைந்த சீனிவாசன் அளித்த தகவலின்பேரில், வீட்டு உரிமையாா் திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு புகாா் தெரிவித்தாா். போலீஸாா் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா்.
அப்போது, ஆனந்தி தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
போராட்டம்: இறந்த ஆனந்தியின் சொந்த ஊா் மயிலாடுதுறை. தகவலறிந்த அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனா். ஆனந்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியும் திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, உரிய விசாரணை நடத்துமாறு காவல் துறைக்கு உத்தரவிடுகிறோம் என்று கோட்டாட்சியா் அலுவலக அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.