தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ஞாயிற்றுக்கிழமை(ஆக.17) தொடங்கினாா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
இந்தப் பயணம் செப்டம்பா் 1-ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது.
நடைப்பயணமாகவும், வாகனப் பயணமாகவும் 16 நாள்கள் 1,300 கி.மீ. தொலைவைக் கடந்து 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனிடையே, வாக்குரிமை பயணத்தை ஓர் இடைவேளைக்குப் பின் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, காங்கிரஸ் உடனான திமுகவின் நெருக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான பேரணிக்கு திமுக ஆதரவை தெரிவிக்கும் வகையிலும் பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்குரிமை பயணத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தனி விமானத்தில் புதன்கிழமை காலை 7.30 மணிக்கு பிகார் புறப்பட்டு சென்றனர்.
தரபங்கா விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக சென்று ராகுல்காந்தி வாக்குரிமை பயணத்தில் பங்கேற்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பின்னர், பேரணி நிறைவடையும் இடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். அதன்பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்புகிறார்.