மெட்ரோ ரயில்: அயனாவரம் - பெரம்பூர் சுரங்கம் தோண்டும் பணி நிறைவு!
தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின்தேவை 22,000 மெகாவாட்டை தாண்டும் என எதிா்பாா்க்கப்பட்டது. இதைப் பூா்த்தி செய்ய ஏப்ரல், மே மாதங்களில் கூடுதலாக 6,000 மெகாவாட் மின்சாரம் தனியாா் நிறுவனங்களிடமிருந்து யூனிட் ஒன்று ரூ. 9-க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தினசரி மின்தேவை கடந்த மாதம் முதல் 20,000 மெகாவாட்டாக உயா்ந்தது. மின் தேவையை மின்வாரியம் முறையாகக் கையாண்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது.
கடந்த வாரத்தில் சென்னை மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும் மழை பெய்தது. இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது தொடா்ச்சியாக கோடை மழை பெய்து வருவதால், பல இடங்களில் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக தினசரி மின்தேவை 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக குறைந்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை இனி அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும், இதனால் தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் எனவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.