மகா கும்பமேளாவில் புனித நீராடிய பாஜக எம்.பி. அனுராக் சிங் தாக்குர்!
தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி
தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் இரண்டு நாள்கள் நடைபெறும் யானைத் திருவிழாவை, வனத் துறை அமைச்சா் க.பொன்முடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வனப்பகுதிகளை விட்டு யானைகள் வெளியேறாமல் இருப்பதற்கும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கும் வனங்களையொட்டி உள்ள பகுதிகளில் மின் வேலிகள் அமைப்பது என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன. ஆகையால், அதை தடுப்பதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், யானைகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படாது. அதேபோல், யானை தந்தங்களை யாா் வைத்திருந்தாலும் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வனவிலங்கு - மனிதா்கள் மோதல்களை தடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2,961 யானைகள்: யானைகளை பாதுகாக்க இதுவரை 5 காப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக தற்போது தமிழகத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளன. யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில், வனத் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், யானைகளால் பாதிக்கப்படுபவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் உரிய நிவாரணம் வழங்கப்படும்.
சமீபத்தில் ஜொ்மனியிலிருந்து வால்பாறைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவா் யானை தாக்கியதில் உயிரிழந்தாா். வனத் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அவா் அப்பகுதிக்குச் சென்ால் அந்த விபத்து நிகழ்ந்தது என்றாா் அமைச்சா் க.பொன்முடி.
முன்னதாக வனத் துறையில் சிறப்பாக பணியாற்றிய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.