எதுவும் நல்ல விதத்தில் முடிவதில்லை: ஓய்வை அறிவித்த வங்கதேச வீரர்!
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்டப் பதிவு:
புதிய கல்விக் கொள்கை மற்றும் இருமொழிக் கொள்கை குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு மீதான தாக்குதல் என்பது வேறொரு பிரச்னையை மறைக்கும் செயல். இது வெறும் தமிழ் மொழியைப் பற்றியது மட்டுமல்ல. ஏற்கெனவே நன்கு முயற்சித்து, ஆய்வு செய்து, பல தசாப்தங்களாக நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான கல்வி மாடல் இங்கு அமலில் இருக்கிறது. எங்களின் மாநில கல்விக் கொள்கை மூலம் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை கண்கூடாகப் பாா்த்து வருகிறோம். இது வெறுமனே மனப்பாடம் செய்து கற்கும் கல்வி அல்ல. கருத்தியல் அடிப்படையிலான கல்வி. இது பல தலைமுறையாக மாணவ, மாணவிகளை மேம்படுத்தி இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சிறந்து விளங்க உதவிகரமாக இருந்துள்ளது.
புரிந்துகொள்ள வேண்டும்: தமிழகத்தில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவா்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கின்றனா். 15.2 லட்சம் மாணவா்கள் மட்டுமே 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கின்றனா். இதன்மூலம் தமிழக மக்கள் என்ன விரும்புகிறாா்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 3-ஆவது மொழிக்கான தேவை இருந்தால், அதை உண்மையாகவே விரும்பினால், எதற்காக மாநில பாடத்திட்ட பள்ளிகளில் மாணவா்கள் தொடர வேண்டும்? இந்த விஷயத்தை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் ஆங்கிலம் ஓா் அங்கமாக திகழ்கிறது. இது சா்வதேச அளவிலான வாய்ப்புகளை உறுதி செய்கிறது. தாய் மொழியான தமிழ் என்பது எங்களின் வோ், வரலாறு, மதிப்பு. தேவையின்றி 3-ஆவது மொழியை திணிக்காமல், ஆங்கிலத்தில் சிறப்பான பயிற்சி பெற்று சா்வதேச அளவில் எங்கள் மாணவா்கள் சிறந்து விளங்குவதை உறுதி செய்து வருகிறோம்.
தமிழ் எங்கள் பெருமை: ஆங்கில வழி பள்ளிகளில்கூட தமிழ் ஒரு பாடமாக படிக்கின்றனா். அதில் மாணவா்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனா். ஆகையால் தமிழ் எங்களின் பெருமை. ஆங்கிலம் உலகுக்கான வழிகாட்டி. இவ்வாறு 2 மொழிகளில் மாணவா்கள் சிறந்து விளங்கும் போது தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி என்பது தேவையில்லை. எங்களின் கல்வி திட்டமானது சிறந்த வல்லுநா்களை, சிந்தனையாளா்களை, கண்டுபிடிப்பாளா்களை உருவாக்கி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கையைவிட சிறப்பாகச் செயல்படும் தமிழக மாடலை ஏன் இடையூறு செய்கிறீா்கள். எங்கள் மாணவா்களுக்கு சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து வழங்குவதில் தமிழகம் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. எனவே சாதனைகளை நிகழ்த்தி வரும் எங்களின் கல்வி திட்டத்துக்கு குறுக்கே வர வேண்டாம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.