தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிக்கன் 65! உலகளவில் 3ஆம் இடம் பிடித்து சாதனை
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65, இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது.
ஆண்டுதோறும் உலகளவில் மக்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளை வகைப்பிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது டேஸ்ட் அட்லாஸ்.
இனிப்பு, அசைவம், பருப்புகளில் செய்யப்படும் உணவு என வகை வகையான பட்டியல்களை வெளியிட்டு படிப்பவர்களின் நாவில் எச்சில் ஊற வைக்கும் இந்த பட்டியலில் தற்போதைய புதிய வெளியீடு கோழிக்கறியை வறுத்து செய்யும் மிகச் சிறந்த உணவுகளின் பட்டியல்.
இதில்தான், தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 மூன்றாவது இடத்தில் இடம்பிடித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே உணவு என்ற பெருமையையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டியாக விளங்கும் டேஸ்ட் அட்லாஸ், சிக்கன் 65- அதன் பிரத்யேக தயாரிப்பு மற்றும் சுவையை புகழ்ந்து தள்ளியிருக்கிறது. இஞ்சி - பூண்டு மசித்த கலவை, உப்பு, காரம், புளிப்பு என மசாலாக்களில் நன்கு ஊற வைத்த சிக்கன் துண்டுகளை எண்ணெயில் போட்டு பொறித்து சிக்கன் 65 தயாரிக்கப்படுகிறது. இது 1960ஆம் ஆண்டு தமிழகத்தில் புஹாரி என்ற உணவகத்தால் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.