``தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்பு... நான் சொல்லியும், முதல்வர் செய்யவில்லை'' - அமித் ஷா
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்துக்கு `ராஜாதித்ய சோழன்’ பெயரைச் சூட்டி, பிப்ரவரி 24-ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது மத்திய அரசு. ராஜாதித்ய சோழன், முதலாம் பராந்தகச் சோழரின் மகன். 948 - 949 இடைப்பட்ட காலத்தில் நடந்த தக்கோலப் போரில், ராஜாதித்ய சோழனின் உயிர் பறிக்கப்பட்டது. போரில் தோற்றாலும், ராஜாதித்யனின் வீர மரணம் தமிழர்களின் மனதில் முத்திரை பதித்தது. தக்கோலப் போர் நடந்த அன்றைய இடம்தான் சி.ஐ.எஸ்.எஃப் மையம் அமைந்துள்ள இன்றைய தக்கோலம்.
இந்த நிலையில்தான், சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு ( ESTABLISHED 1969 ) எழுச்சி தினக் கொண்டாட்டம் இன்று ( வெள்ளிக்கிழமை ) காலை தக்கோலம் பயிற்சி மையத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களின் எழுச்சி தின அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, 6,553 கி.மீட்டர் தூரத்திலான சி.ஐ.எஸ்.எஃப் ( CISF கோஸ்டல் சைக்ளோத்தான் ) கடலோர சைக்கிள் பேரணியையும் வீடியோ இணைப்பின் மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமித் ஷா. சி.ஐ.எஸ்.எஃப் படையைச் சேர்ந்த 14 பெண்கள் உள்பட மொத்தம் 125 வீரர்கள் ஒரே நேரத்தில் குஜராத் லக்பத் நகரத்திலிருந்தும், மேற்கு வங்காளத்தின் கடலோர கிராமமான பக்காலியில் இருந்தும் சைக்ளோத்தானைத் தொடங்கினார்கள். 25 நாள்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சுற்றி வந்து ஏப்ரல் 1 அன்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது இந்த கோஸ்டல் சைக்ளோத்தான்.

இதனிடையே, பாதுகாப்பு தளம் தொடர்பான `சி.ஐ.எஸ்.எஃப் சென்டினல் 2025 ( CISF SENTINEL ) என்ற நூலையும் வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
இதைத் தொடர்ந்து, அமித் ஷா பேசும்போது, ``மத்திய அரசு நடத்தும் மத்திய ஆயுதக் காவல் படைகள் ( Central Armed Police Forces - BSF, CISF, CRPF, NSG, ITBP, SSB ) ஆள்சேர்ப்பு நடைமுறை தேர்வுகளில், உங்கள் தாய் மொழி தமிழுக்கு இதுவரை இடம் இல்லாமல் இருந்தது. தற்போது இத்தேர்வை பெங்காலி, கன்னடம், தமிழ் மற்றும் பிற தாய்மொழிகளில் எழுத பிரதமர் மோடி வழிவகை செய்திருக்கிறார். எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் CAPF தேர்வை இளைஞர்கள் எழுதலாம். தமிழ்நாட்டின் இளைஞர்களும் தமிழில் இந்த தேர்வை எழுத முடியும்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அந்தந்த மாநில மொழிகளில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும், தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை துவக்க வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். அதை விரைவாக அவர் செய்ய வேண்டும். இதன் மூலம் தாய்மொழி வலிமை பெறுவதோடு, தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக முதல்வர் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விரும்புகிறேன். இரண்டு ஆண்டுகளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதுவரை அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனி அவர் ஏதேனும் முயற்சி எடுப்பார் எனவும் நம்புகிறேன்.
இந்தியாவின் கலாசார நீரோட்டத்தை வலுப்படுத்துவதில் தமிழகத்தின் கலாசாரம் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள், ஆன்மீக உயரங்களை அடைதல், கல்வி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என எதுவாக இருந்தாலும், தமிழகம் அனைத்து கோணத்திலும் இந்திய கலாச்சாரத்தை வலுப்படுத்தியே வந்திருக்கிறது. தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் மரபுகள் இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற ரத்தினம் ஆகும். இதை இன்று முழு தேசமும் பெருமையுடன் ஏற்றுக்கொண்டுள்ளது. சோழ வம்சத்தின் சிறந்த வீரரும் வீரமிக்க மன்னருமான ஆதித்ய சோழனின் நினைவாக CISF தக்கோலம் பயிற்சி மையத்துக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். மன்னர் ஆதித்ய சோழனின் மண்ணான தமிழகமானது துணிச்சல் மற்றும் தியாகத்தின் கதைகளையும் சோழப் பேரரசின் புகழ்பெற்ற மரபுகளையும் மேலும் வலுப்படுத்தும்’’ என்றார்" மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா .
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
