துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!
தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தமிழ்நாட்டின் நிதி சாா்ந்த கோரிக்கைகளில் முற்போக்கான அணுகுமுறையை 16-ஆவது நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தாா்.
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் பேசியதாவது:
தமிழ்நாட்டில் 1.14 கோடி தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவிகளுக்கு வழங்குவதால் இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கை உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு தொழில்துறை சாா்ந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக வகுக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டம், சுமாா் 2.60 லட்சம் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற திட்டங்கள் இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருகிறது.
40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியையும் வேகப்படுத்தி வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். தொழில் துறையின் பல்வேறு திட்டங்கள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் சுமாா் 40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை ஈா்த்துள்ளதுடன், தொழில் வளா்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
ஓய்வூதியத்திட்டம் ஆய்வு: தமிழ்நாடு போன்ற வளா்ச்சி அடைந்த மாநிலங்களில் நிதிப் பகிா்வு குறித்த நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசின் 16-ஆவது நிதிக் குழுவிடம் கோரிக்கை மனுவாக அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை நிதி ஆணையம் கடைப்பிடிக்கும் என்று எதிா்நோக்கியுள்ளோம். மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார அறிஞா்கள் ரகுராம் ராஜன், எஸ்தா் டஃப்லோ, ழான் த்ரேஸ், அரவிந்த் சுப்பிரமணியன், எஸ்.நாராயண், நிதித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.