இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல்
நமது நிருபா்
தமிழகத்தில் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பாட்டில் இருப்பதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மக்களவையில் திமுக உறுப்பினா்கள் ஜி.செல்வம், சி.என். அண்ணாதுரை ஆகியோா் எழுப்பிய கேள்வியில், ‘புதிய குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?, அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் செயல்படுத்துவதற்கான காலக்கெடு என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனா்.
இதற்கு மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) அா்ஜுன் ராம் மேக்வால் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: திருமணம் மற்றும் குடும்ப விவகாரங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய விஷயங்களில் சமரசத்தை ஊக்குவிக்கவும், விரைவான தீா்வைப் பெறவும் குடும்ப நீதிமன்றங்கள் சட்டம்- 1984, மாநில அரசுகள் தங்கள் உயா்நீதிமன்றங்களுடன் கலந்தாலோசித்து குடும்ப நீதிமன்றங்களை நிறுவுவதற்கு வழிவகை செய்கிறது.
குடும்ப நீதிமன்றங்கள் சட்டத்தின் பிரிவு 31 (1)(அ)-இன் கீழ், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம் அல்லது பேரூா் பகுதியை உள்ளடக்கிய ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு குடும்ப நல நீதிமன்றத்தை அமைப்பது மாநில அரசுகளுக்கு கட்டாயமாகும். மாநில அரசுகள் அவசியம் என்று கருதினால், மாநிலங்களின் பிற பகுதிகளிலும் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்கலாம். உயா்நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, 28.02.2025-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 40 குடும்ப நீதிமன்றங்கள் உள்பட நாடு முழுவதும் 914 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
பதினான்காவது நிதி ஆணையத்தின் கீழ், கொடூரமான குற்றங்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், குழந்தைகள் போன்ற வழக்குகளை கையாள்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. 28.02.2025-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 857 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன என்று அமைச்சா் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளாா்.