"செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வேன் எனச் சொன்னால்..!" - உச்ச நீதிமன்றம் சொன்னதெ...
தமிழ் விக்கிப்பீடியாவில் 10000 கட்டுரைகள் படைத்த சாதனைத் தமிழர் | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பு 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இ.மயூரநாதன் என்பவரே 2003 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் நாள் தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கியுள்ளார். 2016-ஆம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகளில் டாப் 10 மனிதர்களில் கலைக்களஞ்சியன் என்ற பெயரில் இ. மயூரநாதனும் இடம் பெற்றார்.
ஜனவரி 27 ஆம் நாள் அன்றைய நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவில் 1, 71, 194 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவில் பேசப்படும் மொழிகளுக்கான விக்கிப்பீடியாக்களில் தமிழ் விக்கிப்பீடியா இரண்டாவது இடத்திலும் தென்னிந்திய மொழி விக்கிப்பீடியாக்களில் தமிழ் முதலிடத்திலும் உள்ளது.
தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவு செய்யப்பட்ட பயனர்களாக 2,40,369 இருந்தாலும் தொடர்ந்து பங்களிக்கும் முன்னணிப் பயனர்களாக 311 பங்களிப்பாளர்களே திகழ்கின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ktxf8yyh/gaj.png)
தமிழ் விக்கிப்பீடியாவில் தனி ஒருவராக 10,000 கட்டுரைகளுக்கும் அதிகமான கட்டுரைகளை உருவாக்கி தொடர்ந்து பயணித்து வரும் விக்கிப்பீடியராக கி. மூர்த்தி திகழ்கிறார். இவர் தமிழ்நாட்டிலுள்ள வேலூரைச் சேர்ந்தவர். வேதியியல் பட்டதாரி ஆவார். இவர் கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கூடுதல் கருவூல அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
வருகிற 28.02.2025 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். இவர் தான் சார்ந்த அரசுப் பணியிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி வந்தவர் ஆவார். இவர் இரண்டு முறை குடியரசு நாள் விழாவின் போது மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறப்பாகப் பணிபுரிந்தமைக்காக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளார்.
தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்ட இவர் விடுமுறை நாள்களிலும் ஓய்வு நேரங்களிலும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் 15.06.2013 முதல் எழுதத் தொடங்கியுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவராகவும் இவர் உள்ளார்.
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் துப்புரவுப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இந்திய அளவிலான பல விக்கிப்பீடிய நிகழ்வுகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆவார். இவர் 31 டிசம்பர் 2024 அன்றைய நிலையில் தமிழ் விக்கிப்பீடியாவில் 10,000 கட்டுரைகள் தொடக்கம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/n1arowg4/Wikipedia-logo-v2-ta.svg.png)
இச்சாதனையை நிகழ்த்தும் முதல் தமிழ் விக்கிப்பீடியர் இவரே. இவர் வேதியியல் சார்ந்த பல்லாயிரம் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியாவின் பரப்புரைப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் இவர் பல விக்கிப்பீடிய அறிமுக நிகழ்வுகளிலும் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கேற்றுள்ளார்.
இவரால் ஈர்க்கப்பட்டு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வந்தவர்கள் ஏராளம். இவரின் கனவெல்லாம் இன்னும் பல இளைஞர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க வர வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வேண்டும். தமிழில் தகவல் தேடுவோர் அனைவருக்கும் முதல் நிலையில் தகவல்கள் தமிழிலேயே கிடைக்க வேண்டும். தமிழ் மொழி இணையத்தில் முன்னிலை பெற வேண்டும் என்பவையே தான்.
இந்த இணைப்பில் சென்று பார்த்தால் தமிழ் விக்கிப்பீடியர் கி. மூர்த்தி அவர்கள் தொடங்கிய கட்டுரைகளின் பட்டியலை விக்கிப்பீடியாவிலேயே பார்க்கலாம்.
தமிழ் விக்கிப்பீடியர் கி. மூர்த்தி அவர்களுடனான நேர்காணல்
கேள்வி: உங்களைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம்
பதில்: என்னுடைய சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் உள்ள மராட்டிப்பாளையம் என்ற கிராமம் ஆகும்.
கேள்வி: உங்கள் கல்வி வாழ்க்கை பற்றி?
பதில்: நான் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நான் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டப்படிப்பு படித்தேன். இக்கல்லூரியில் நான் கவிக்கோ அப்துல் ரகுமான், கவியருவி அப்துல் காதர் ஆகிய இரு தமிழாசிரியர்களிடமும் தமிழ் படித்தேன். இந்த தமிழறிஞர்கள் விதைத்தது தான் நான் தமிழ் மீது கொண்டுள்ள ஆர்வத்திற்கு வழிவகுத்தது. பின்னர் முதுகலை தமிழும் இளங்கலை கல்வியலும் படித்து முடித்தேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/k5db920j/6547.jpg)
கேள்வி: தங்களின் அரசுப்பணி சார்ந்து கூற முடியுமா?
பதில்: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4-இன் கீழான பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று கருவூலக் கணக்குத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து இன்று திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் கருவூல அலுவலராகப் பணியாற்றி வருகிறேன். நடப்பு ஆண்டில் இம்மாத இறுதியில் பணி நிறைவு பெற உள்ளேன்.
கேள்வி: நீங்கள் தமிழ் மீது கொண்டிருந்த பற்று ஏன் படைப்பிலக்கியத்தை விட்டு கலைக்களஞ்சியத்தை நோக்கி வந்தது?
பதில்: அனைவரையும் போலவே நானும் படைப்பிலக்கியத்தின் மீதே தொடக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன். எனது கவிதைகள், கதைகள் தினமணி கதிர், செம்மலர், தினமலர் வாரமலர் போன்ற இதழ்களில் வெளிவந்தன. பின்னர் வீட்டில் குழந்தைகளின் கல்விக்காக மேசைக்கணினி வாங்கியிருந்தோம்.
இணைய இணைப்பையும் பெற்றிருந்தோம். குழந்தைகளின் பயன்பாட்டிற்குப் போக மீதமிருந்த நேரத்தில் இணையத்தில் உலாவும் போது தமிழில் தகவல்கள் தேடும் போது தமிழ் விக்கிப்பீடியா அறிமுகமாகியிருந்த நேரம். யாவராலும் தொகுக்கப்படக்கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற அறிமுகம் என்னை ஈர்த்தது.
விக்கிப்பீடியாவில் தரப்பட்டிருந்த வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி சிறு தொகுப்புகளைச் செய்யக் கற்றுக் கொண்டேன்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படித்துப் புரிந்து கொள்ளத் தக்க வகையில் நான் படித்த வேதியியலைக் கொண்டு சேர்க்க விரும்பி, வேதியியலில் தனிமங்கள், சேர்மங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். இவ்வாறாகவே படைப்பிலக்கியத்தின் பக்கம் இருந்த எனது ஆர்வம் கலைக்களஞ்சியக் கட்டுரைகளை உருவாக்கும் நோக்கில் திசைமாறியது.
கேள்வி : கட்டுரை உருவாக்கம் தவிர தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் ஆற்றும் இதர பணிகள் குறித்து கூற முடியுமா?
பதில் : 15.01.2019 முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் எனக்கு நிர்வாக அணுக்கம் கிடைத்தது. நிர்வாக அணுக்கம் கிடைப்பதற்கு முன்பாகவும் புதிய பயனர்களால் எழுதப்படும் கட்டுரைகளைத் துப்புரவு செய்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தேன். நிர்வாகியாகச் செயல்படுவதற்கான அணுக்கம் கிடைத்த பிறகு விஷமத் தொகுப்புகளைச் செய்வோரைத் தடை செய்தல், விஷமத் தொகுப்புகளை நீக்குதல், ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளை இணைத்தல் போன்ற பணிகளை விக்கிப்பீடியாவில் செய்து வருகிறேன்.
தவிரவும் தமிழ் விக்கிப்பீடியாவின் பரப்புரை சார்ந்த பணிகளான நேரிடையான மற்றும் இணையவழிப் பயிற்சிப் பட்டறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பான விரிவான அறிமுகவுரையாற்றுதல், செயல்முறை விளக்கம் அளித்தல், புதிய பயனர்களை ஊக்குவித்தல், தொடர்ந்து பங்களிக்க வழிகாட்டுதல் ஆகிய பணிகளை மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுடன் இணைந்து செய்து வருகிறேன்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/op3oqxp0/information-10152981280.webp)
கேள்வி: தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களின் எதிர்கால இலக்கு என்ன?
பதில்: தமிழ் விக்கிப்பீடியாவில் இன்னும் அதிக பங்களிப்பாளர்களைச் சேர்ப்பது, தமிழ் கலைக்களஞ்சியத்திற்குத் தேவையான அறிவியல் கட்டுரைகளை இன்னும் அதிக எண்ணிக்கையில் உருவாக்குதல், பரப்புரைப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு செயல்படு பங்களிப்பாளர்களை ஈர்க்கப் புதிய திட்டங்களில் ஈடுபடல், தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடல் ஆகியவை எனது எதிர்கால இலக்குகளாகும்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-01/f15e0a9f-a100-48d1-abc8-2fd0e06ecd17/IMG_1910.png)
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...