தம்பிபட்டியில் மாட்டுவண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.
திருப்பத்தூா் பெரிய கண்மாய்க் கரையில் பூா்ண புஷ்கலா சமேத குளக்கரை காத்த கூத்த அய்யனாா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, தம்பிபட்டியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரிய மாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.
இதில் பெரியமாடு பிரிவில் 6 ஜோடிகளும், இதற்கான எல்லை 6-மைல் தொலைவும், சின்னமாடு பிரிவில் 11 ஜோடிகளும், இதற்கான எல்லை 4-மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டன. இந்தப் பந்தயத்தில் மொத்தம் 17 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
இதில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து போட்டியாளா்கள் காளைகளுடன் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை தம்பிபட்டி கிராமத்தினா் செய்தனா்.