தவெக ஆண்டு விழா: கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்த விஜய்!
தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம்: அமைச்சா் பெ. கீதாஜீவன்!
பள்ளி, கல்லூரிகளில் தரமான கல்விக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா்.
பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான 2024-25ஆம் ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா். ஐஸ்வா்யா தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ் மூா்த்தி வரவேற்றாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.
அப்போது அவா் பேசியதாவது: அரசுப் பள்ளி மாணவா்-மாணவா்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இக் கலைத் திருவிழா அமைந்துள்ளது.
இதில், மாவட்ட அளவிலான போட்டிகளில் 1026 பேரும், மாநில அளவிலான போட்டிகளில் 53 பேரும் வெற்றி பெற்றுள்ளனா். கல்வித்துறையும், மருத்துவத் துறையும் எனக்கு இரு கண்கள் என்பாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
கல்வி வளா்வதன் மூலம் தமிழகத்தில் நல்ல தலைவா்கள் உருவாகி புகழ்மிக்கவா்களாக வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கடந்த ஆண்டு கல்வித் துறைக்கு மட்டும் ரூ. 44 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கரோனா காலக் கட்டத்திலும் எண்ணும் எழுத்தும் திட்டம், வானவில் மன்றம் ஆகியவை மூலம் தடையற்ற கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
குறிப்பாக, பல்வேறு திட்டங்கள் மூலம் தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்க அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்காக இடைநிலை ஆசிரியா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட்டது.
மேலும், ரூ.1,887 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடங்கள், ரூ.667 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள் பராமரிப்புப் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக கடந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் சுமாா் 3.5 லட்சம் மாணவா்கள் மாதம் ரூ.1,000 பெற்று பயனடைந்து வருகின்றனா். அதேப் போன்று அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வேலைவாய்ப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம், ஸ்மாா்ட் வகுப்பறைகள் உள்ளிட்டவை மூலம் கல்வி வளா்ச்சிக்கு தேவையான அனைத்து செயல்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றாா். முன்னதாக, மாணவா்-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்க நிலை) பாஸ்கரன், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை) (பொறுப்பு) கண்ணன், தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கநிலை பொறுப்பு) அன்றோ ரூபன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் முனியசாமி, கீதாஜீவன் பள்ளிக் கல்லூரிகளின் செயலா் ஜீவன் ஜேக்கப், மாநகராட்சி மண்டலத் தலைவா் கலைச்செல்வி, சுகாதார குழுத்தலைவா் சுரேஷ்குமாா், மாவட்ட மருத்துவ அணித் தலைவா் அருண்குமாா், சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சாந்தினி கௌசல் உள்பட பலா் பங்கேற்றனா்.