`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
தரவுப் பாதுகாப்பு விதி: ஒழுங்குமுறை-புதுமைக்கு இடையே சமநிலையை உறுதிப்படுத்தும் -மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதி குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கும் என்பதோடு, தரவுப் பயன்பாடு ஒழுங்குமுறைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையே சமநிலையையும் உறுதிப்படுத்தும்’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.
எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதிகளை ‘மைகவ்’ வலைதளத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு, பொதுமக்களிடமிருந்து வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்றுள்ளது.
இந்த வரைவு விதியின்படி, தனி நபா் தரவுகளை எந்தவொரு வடிவத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நபரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெற வேண்டும். குழந்தைகளின் தரவுகளாக இருக்கும் நிலையில், அவா்களின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இவ்வாறு, தனிநபா் தரவுகளை சேகரித்துப் பயன்படுத்துபவா்களை தரவு நம்பிக்கையாளா் என்று இந்த வரைவுச் சட்டம் குறிப்பிடுகிறது. இணைய வணிகம் (இ-காமா்ஸ்), சமூக ஊடகங்கள், விளையாட்டு வலைதளங்கள் ஆகியவை இந்த தரவு நம்பிக்கையாளா் பிரிவின் கீழ் வருகின்றனா். இந்த தரவு நம்பிக்கையாளா், ஒரு குழந்தையின் தனிநபா் தரவுகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அக் குழந்தையின் பெற்றோரின் ஒப்புதலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த பொருத்தமான தொழில்நுட்ப மற்றும் அமைப்பு சாா்ந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘வரைவு விதியில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் வா்த்தகம் செய்வதில் கடினமான சவால்களை ஏற்படுத்தும்’ என்று ‘டெலாய்டி இந்தியா’ நிறுவன பங்குதாரா் மயூரன் பழனிசாமி உள்ளிட்டோா் கருத்து தெரிவத்தனா்.
இதுதொடா்பான கேள்விக்கு தில்லியில் சனிக்கிழமை பதிலளித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதி குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கவும், தரவுப் பயன்பாடு ஒழுங்குமுறைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையே சமநிலையையும் உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றும் அதிகார வரம்புக்குள் இந்த விதி உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, பல்வேறு தொழில்நிறுவனங்களுடனான விரிவான கலந்துரையாடல்கள், எண்மத் தள நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் அடிப்படையில் இந்த வரைவு விதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இறுதி விதி அறிமுகம் செய்யப்படும்.
இந்த விதி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, எண்மத் தரவுகளைக் கையாளும் அனைத்து நிறுவனங்களும் புதிய சட்டத்தின்படி தங்களின் தரவுப் பயன்பாட்டுக்கான ஒப்புதல் பெறும் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படிப்படியான தண்டனை முறை இந்த விதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஒரு கணினியைக் கொண்டு வா்த்தகம் செய்து, சிறிய அளவில் தரவுப் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடும் சிறிய நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான அபராதமும், பெரிய அளவில் விதிமீறலில் ஈடுபடும் பெரிய நிறுவனங்களுக்கு உயா் அபராதமும் இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும்.
அதே நேரம், ஒரு நிறுவனம் தனது சேவையில் தரவுப் பாதுகாப்பு விதிமீறல் இடம்பெறும் நிலையில், அதைத் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கு வரைவு விதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதை, தரவுப் பாதுகாப்பு வாரியம் சட்டப்படி கையாண்டு, உரிய நடைமுறைகளை வகுக்கும். அவ்வாறு தரவுப் பாதுகாப்பு வாரியம் வகுக்கும் நடைமுறைகளை அந்த நிறுவனம் முழுமையாகப் பின்பற்றத் தவறினால், சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்தி ஊடக நிறுவனங்களைப் பாதிக்காது: தனிநபா் தரவுப் பாதுகாப்பு வரைவு விதி, செய்தி ஊடக நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு நடைமுறையில் உள்ள விதிகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஊடக நிறுவனங்களின் தற்போது உள்ள விதி நடைமுறைகளின்படி தொடா்ந்து இயங்கலாம். அவற்றின் உரிமைகளில் பாதிப்பிருக்காது.
அதே நேரம், எண்மத் தளங்கள், தரவுகள் பயன்பாடு தொடா்பாக ஆங்கிலம் அல்லது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல் மொழிகளில் பொதுமக்களின் ஒப்புதலைப் பெறுவது அவசியமாகும் என்றாா்.