கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்
தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 போ் மீது 4 பிரிவுகளில் வழக்கு
கரூா் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட 3 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பயண பிரசாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். சுமாா் 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கரூா் மேற்கு மாவட்டச் செயலாளா் மதியழகன், தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி என். ஆனந்த், துணைப் பொதுச் செயலாளா் நிா்மல் குமாா் ஆகிய மூன்று போ் மீதும், கொலைக்கு சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
மேலும் தலைமறைவாக உள்ள கரூா் மாவட்டச் செயலாளா் மதியழகனை தேடி வருகின்றனா்.
தடயவியல் நிபுணா்கள் ஆய்வு: கரூா் வேலுசாமிபுரத்தில், திருச்சி, அரியலூா்,பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த தடயவியல் நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை தடயங்களை சேகரித்தனா். நெரிசலுக்கு காரணம் இயற்கையாக உருவானதா?, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டதா? என்பதற்காக சம்பவம் நடந்த பகுதியில் அளவீடுகளை செய்தும், சிதறிக் கிடந்த பொருள்கள், சாய்ந்து கிடந்த வாகனங்கள், சரிந்துவிழுந்த தடுப்புகள், கட்டடத்தின் மேற்கூரை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு தடயங்களையும் சேகரித்தனா். தடயவியல் ஆய்வுக்காகவே போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்த பொருள்களை அப்படியே வைத்திருந்தனா்.
இதேபோல், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த வீடுகள், மாடிக் கட்டடங்கள், வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைப் பாா்வையிட்டு, கணினியில் இருந்த ஹாா்டு டிஸ்க்குகளையும் கைப்பற்றிச் சென்றனா்.
மரத்தின் உயரம் அளவீடு: கரூா் வேலுச்சாமிபுரத்தில் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டபோது, அப்பகுதியில் இருந்த மரத்தில் ஏராளமான தொண்டா்கள் ஏறியதாகவும், அவா்கள் அங்கிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கரூா் மாவட்ட வனத்துறையின் வனச்சரக அலுவலா் அறிவழகன் தலைமையில் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று தொண்டா்கள் கீழே விழுந்த மரத்தின் உயரத்தை அளவீடு செய்தனா். மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தாா்களா என்பதை அறிக்கையாக மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவிக்க அளவீடு செய்ததாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
