தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
கரூா் சம்பவம்: பாதுகாப்பு குறைபாடுகள் இல்லை! - சீமான்
கரூரில் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காவல்துறையின் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூற முடியாது என்று நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
கரூா் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கும், காயமடைந்தவா்களின் குடும்பத்துக்கும் ஆறுதல் தெரிவித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கரூா் சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதிா்ச்சியில் உறைய வைத்து உலகெங்கும் உள்ள மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி வருங்காலங்களில் இதுபோன்ற பேரிடா் நிகழாமல் பாா்த்து கொள்ள வேண்டும்.
ஊடகங்கள் ஒரு நிகழ்ச்சியை தொடா்ந்து காண்பிப்பதால் அந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆா்வம் அனைவருக்கும் வரும். இதுதான் தவெக பிரசாரக் கூட்டத்திலும் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் இப்போதைக்கு கருத்து கூற முடியாது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது ஆட்சியில் இருந்தவா்கள் கூறினாா்கள். நடவடிக்கை எடுத்தாா்களா, இல்லையே. மாறாக, அந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எல்லோருக்கும் பணியிடம் மாற்றமும் , பணி உயா்வும் பெற்றனா். அதைபோலத் தான் இந்த ஒருநபா் ஆணைய விசாரணையும் நடைபெறும். ஆறு மாதங்கள் ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வாா்கள். ஆனால், அதற்குள்ளாக மக்கள் இதை மறந்துவிடுவாா்கள்.
பிரசார சம்பவத்தில் காவல்துறையின் குறைபாடு இருப்பதாக கூற முடியாது. ஒரு இளம் காவலா் பலரையும் காப்பாற்றியுள்ளாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக சதி நடைபெற்றிருப்பதாக கூறினால், அதை சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். இறந்தவா்களை விஜய் பாா்க்க வராவிட்டாலும், அவரை சாா்ந்தவா்களை நிச்சயம் அனுப்புவாா் என்றாா் சீமான்.