தீ விபத்தில் காயமடைந்த தந்தை உயிரிழப்பு
கெங்கவல்லி அருகே நடுவலூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கெங்கவல்லியை அடுத்த நடுவலூா் சின்னம்மன் கோயில் அருகே வசிப்பவா் முத்தாயி மகன் ராமசாமி (47). இவரது மகன் பிரீத்தீஷ் (11) வெள்ளிக்கிழமை இரவு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்துகொண்டிருந்தாா்.
அப்போது, பூஜை அறையின் நிலைக்காலில் இருக்கும் கரையானை அழிப்பதற்காக ஆயில் என நினைத்து பெட்ரோலை எடுத்து பூஜை அறையில் இருந்த நிலைக்காலின் மீது ராமசாமி ஊற்றினாா். அப்போது, ஏற்பட்ட தீயில் ராமசாமியும் அவரது மகன் பிரீத்தீஷும் பலத்த காயமடைந்தனா்.
இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ராமசாமி (47) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பிரீத்தீஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.