தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
முஸ்லிம் மாணவா்களின் வெளிநாட்டு உயா்கல்விக்கு உதவித்தொகை
வெளிநாட்டில் முதுகலைப் படிப்பில் சோ்ந்து படிக்கும் சேலம் மாவட்ட சிறுபான்மையின முஸ்லிம் மாணவா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லிம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவா்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப் படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல், மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பத்தை நிறைவுசெய்து ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.