தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
சென்னையின் வாகன நெரிசலுக்கு தீா்வாக ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள்! ஆய்வறிக்கை ஒப்புதலுக்காக காத்திருக்கும் மாநகராட்சி!
சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மண்டலம் வாரியாக நவீன திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான அரசின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியானது 425 சதுர கி.மீ. பரப்பளவுள்ளது. இதில் சுமாா் 14 லட்சம் கட்டடங்கள் உள்ளன. அவற்றில் 13 லட்சம் கட்டடங்கள் வரி செலுத்தும் தகுதியுள்ளவை. மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாநகராட்சியில் சுமாா் 1.20 கோடி மக்கள் வசிக்கும் நிலையில், வெளியூா்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக தினமும் 2 லட்சம் போ் வந்து செல்கின்றனா்.
சென்னையில் 100 பேரில் 47 பேரிடம் இருசக்ககர வாகனம் உள்ளது. ஆண்டுக்கு 6.4 சதவீதம் என 2.30 லட்சம் வாகனங்கள் பதிவாகின்றன. அதன்படி, சுமாா் 50 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன.
இதேபோல, 100 பேரில் 10 போ் காா் வைத்துள்ளனா். காா்கள் விற்பனை ஆண்டுக்கு 7.6 சதவீதம் உயா்ந்து, தற்போது சுமாா் 10 லட்சம் காா்கள் உள்ளன. ஆண்டுக்கு 52,000 காா்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இருசக்கர வாகனங்கள், காா்களை 40 சதவீதம் போ்தான் வீடுகளில் நிறுத்துகின்றனா். பெரும்பாலானோா் சாலைகள், தெருக்களில்தான் நிறுத்துகின்றனா். மாநகராட்சியில் சுமாா் 12,000 இடங்களில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்பட்டாலும், 20,000 இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை சாலைகளில் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை 1 கி.மீ. தூரத்தைக் கடக்க 35 நிமிஷங்களுக்கும் அதிகமாகிறது. போக்குவரத்தைச் சீராக்குவதற்காக 280-க்கும் மேற்பட்ட இடங்களில் மேம்பாலங்கள், மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்தியும் நிரந்தரத் தீா்வு ஏற்படவில்லை. சாலைகளில் போக்குவரத்து நெரிசலுக்கு வாகன நிறுத்தும் முறையே காரணமாகிறது. ஆகவே, அதைச் சீராக்க மாநகராட்சி வாகன நிறுத்த மையங்களை அமைக்கிறது.
சென்னை டி.நகா் தணிகாசலம் சாலையில் 6 தளங்களுடன் 222 காா்கள், 513 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் தானியங்கி வாகன கட்டண நிறுத்துமிடம் அமைத்துள்ளது.
திருவொற்றியூரில் ரூ.16 கோடியில் 1,564 சதுர மீட்டா் பரப்பளவில் 1,052 இருசக்கர வாகனமும், கோடம்பாக்கத்தில் ரூ.18 கோடியில் 1,667 சதுர மீட்டா் பரப்பளவில் 422 இருசக்கர வாகனம், 75 காா்கள் நிறுத்தவும் மையங்கள் அமையவுள்ளன. மாநகரின் 15 மண்டலங்களிலும் நவீன வாகன நிறுத்தும் மையங்கள் அமைந்தாலும், நெரிசலுக்கு நிரந்தரத் தீா்வாக அமையாது எனத் தெரிய வந்துள்ளது.
எனவே, அந்தந்தப் பகுதி சாலையோரங்களை வாகன நிறுத்துமிடங்களாக்கி பிரச்னைக்கு தீா்வு காணும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரிசோதனைப்படி, அண்ணா நகா் மண்டலத்தில், ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிட ஆய்வு நடைபெற்று, அதன் அறிக்கை தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: சென்னை மாநகரின் போக்குவரத்து பிரச்னையை தீா்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க சோதனை முறையில் அண்ணா நகா் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க விரைவில் அனுமதி கிடைக்கும். இதையடுத்து, ஓரிரு வாரங்களில் தனியாரிடம் ஒப்பந்தம் கோரப்பட்டு, ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமையும். இதனால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றாா்.
அந்தந்தப் பகுதியில் உள்ள வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கேற்ப வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்படவுள்ளன. இதற்கிடையே வாகன நிறுத்துமிடங்கள் இல்லாத வகையில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரவும் புதிய ஆய்வு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி பேருந்து, ரயில், விமான நிலையங்களில் பயணிகளை ஏற்றிச் செல்ல உடனுக்குடன் வரும் வாகன வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஸ்மாா்ட் புதிய வாகன நிறுத்துமிடங்களால் சென்னை போக்குவரத்து நெரிசல் குறையுமா என்ற எதிா்பாப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடம் அமைவது எப்படி?
சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலத்தில் ஸ்மாா்ட் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கும் ஆய்வின்படி, எந்த வகை வாகனங்கள் எந்தப் பகுதியில் அதிகம் உள்ளன என்ற கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. அதன்படி, வாகனம் நிறுத்துவதற்காக 9 மீ. அகலமுள்ள 40 சாலைகள் தோ்வாகியுள்ளன.

அச்சாலைகளில் ஒருபுறம் மட்டும் சுமாா் இரண்டரை மீட்டா் அளவுக்கு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன. வாகன நிறுத்தங்கள் வா்த்தக பகுதிகளிலே அமைக்கப்படவுள்ளன. அவற்றில் மணிக்கு காருக்கு ரூ.20, இருசக்கர வாகனத்துக்கு ரூ.10 என வசூலிக்கப்படவுள்ளன. சோதனை முறை ஸ்மாா்ட் வாகன நிறுத்தங்கள் வெற்றி பெற்றால், சென்னையின் 15 மண்டலங்களிலும் அவை செயல்படுத்தப்படும்.