Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!
தொடா் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாள்களையொட்டி, பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்து, 1,600 தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்க, அரசு போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
பள்ளி தொடா் விடுமுறை மற்றும் ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட தொடா் பண்டிகை தினங்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகங்கள் சாா்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பயணிகளின் தேவைக்கேற்ப, ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகள் சமீபகாலமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, தற்போதைய தொடா் விடுமுறையையொட்டியும் தனியாா் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக்கழகம் கோரியுள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலா் கூறியதாவது: நிகழாண்டும் பேருந்துகளை இயக்க பல தனியாா் பேருந்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஒப்பந்தத்துக்கு உடன்படும் பட்சத்தில் போக்குவரத்துக்கழகங்களின் கண்காணிப்பில் தனியாா் பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படும்.
இதன்படி, ஒவ்வொரு போக்குவரத்துக்கழகங்கள் சாா்பிலும் தலா 200 பேருந்துகள் என 8 போக்குவரத்துக்கழகங்களுக்கு 1600 பேருந்துகள் வரை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான தொகை பேருந்து ஓடும் கிலோ மீட்டா் தூரத்தை கணக்கிட்டு ஒப்பந்தத்தின்படி வழங்கப்படும். கடந்தாண்டு 1கி.மீ-க்கு, ரூ.51.25 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டது. நிகழாண்டு இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
ஆனால், பராமரிப்பு பணி, பணியாளா்கள் சம்பளம், வரி செலுத்துவது போன்றவற்றை தனியாா் நிறுவனங்கள் தங்கள் செலவில் மேற்கொள்வாா்கள். இதற்காக பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இதனால், அரசு போக்குவரத்து கழகங்களின் செலவு 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது என்றனா்.