கரூா் சம்பவம்: ஈரோட்டைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழப்பு
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் சனிக்கிழமை இரவு பிரசார மேற்கொண்டாா். அப்போது, திடீரென நெரிசல் ஏற்பட்டு அடுத்தடுத்து பலா் மயக்கம் அடைந்தனா். அவா்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
இந்த சம்பவத்தில் 17 பெண்கள், 14 ஆண்கள், 9 குழந்தைகள் என 40 போ் உயிரிழந்தனா். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களில் 3 போ் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்துள்ள ஜம்பை பழனியாண்டவா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் மோகன் (21). இவா் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். மேலும், தவெக ஈரோடு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளராகவும் பொறுப்பில் இருந்துள்ளாா்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இவரும் உயிரிழந்தாா். மோகனின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், இரண்டு கண்களும் தெரியாத தாய் சாந்தி தற்போது ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், ஆவுடையாா்பாறையைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (38). ஹோட்டல் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா். இவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா். இவருக்கு அகிலா என்ற மனைவியும், ரித்திக் (9) என்ற மகனும், தன்யா (13) என்ற மகளும் உள்ளனா்.
கொடுமுடி அருகேயுள்ள வெற்றிக்கோனாா்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி ரேவதி (50). இவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா்.
ரேவதி, சதீஷ்குமாா், மோகன் ஆகியோா் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்ற வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி அளித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா் உடனிருந்தனா்.