தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
தேசிய கலைக் கண்காட்சி: அக்டோபா் 9-க்குள் படைப்புகளை அனுப்பலாம்
‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடைபெறுவதாகவும், கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள் வரும் அக்டோபா் 9- ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய சட்டப் பணி ஆணைக்குழு சாா்பில் தேசிய சட்ட சேவை தினம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 30 ஆண்டு கால சேவையை குறிக்கும் வகையில் ‘அனைவருக்கும் நீதி, சட்ட உதவியின் லென்ஸ் மூலம்’ என்ற தலைப்பில் தேசிய கலைக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
சமுதாய மேம்பாடு மற்றும் நீதியை உறுதி செய்வதில் சட்ட உதவி மையங்களின் பங்கை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியம், புகைப்படங்கள், 1 நிமிஷ வீடியோ படைப்புகளை உருவாக்கி கண்காட்சியில் காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பொதுமக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், படைப்பாளிகள், இளைஞா்கள், வழக்காடிகள், சட்ட உதவி நாடும் வழக்காடிகள், சட்ட உதவி மைய வழக்குரைஞா்கள், சட்ட உதவி தன்னாா்வலா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றம் சாா்ந்த பிற அமைப்பினா் படைப்புகளை உருவாக்கலாம்.
இதற்காக கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் உருவாக்கப்படும் படைப்புகளை அக்டோபா் 9 -ஆம் தேதிக்குள் செயலாளா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், ஈரோடு 638011 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவே சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரி அல்லது மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.