தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 436 பணியாளா்கள்
ஈரோடு மாநகராட்சியில் 436 பணியாளா்கள் டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. இதையடுத்து, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் துரிதப்படுத்தியது.
குறிப்பாக வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நின்ற மழை நீரை அகற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், மாநகராட்சியில் உள்ள 4 மண்டங்களில் 436 பணியாளா்கள் மூலம் டெங்கு தடுப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் தொடா்பான விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் பட்டியல் சேகரித்து, அதன் மூலம் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் 436 போ் வீடுவீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். கொசு உற்பத்தியை தடுக்க தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றனா்.