பாகிஸ்தான் அமைச்சர் கையில் கோப்பை வாங்க இந்தியா மறுப்பு! கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியிம் கைகளில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என இந்திய அணி வீரர்கள் மறுத்தனர். இதனால், அந்தக் கோப்பையை ஆசியக் கோப்பை நிர்வாகம் மீண்டும் எடுத்துச் சென்றதால் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்து 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு சுருண்டது. பின்னர், பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணி வெற்றிபெற்றதும் ஆட்டநாயகன் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரன்னர்-அப் 2-வது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.
பின்னர், வெற்றிபெற்ற இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
மோஷின் நக்வி இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்குவார் என்று தொகுப்பாளர் சைமன் டவுல் அறிவித்தார். ஆனால் அவருக்குப் பதிலாக வங்கதேசத்தின் அமினுல் இஸ்லாம் அவற்றை வழங்கினார். இருப்பினும், நக்வி இரண்டாம் இடம்பிடித்தவர்களுக்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் வழங்கினார்.
Who needs the trophy? Celebrating without it feels better than receiving it from a Pakistani.pic.twitter.com/GwPRdrXiEv
— KKR Karavan (@KkrKaravan) September 28, 2025
இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் சர்மா கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர்.
இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசியை தலைவர் தேவ்ஜித் சாய்க்கியா, “பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை நாங்கள் வாங்குவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும்” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்கவில்லை.
நேற்றையப் போட்டியிலும்கூட இரு கேப்டன்களையும் தனித்தனி தொகுப்பாளர்களே பேட்டி எடுத்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்திருப்பது மேலும் சலசலப்பையே உருவாக்கியுள்ளது.