கரூா் சம்பவம் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
கரூா் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தமிழ்மணி சாரிட்டபிள், எஜூகேஷனல் அறக்கட்டளை, அரவிந்த் கண் மருத்துவமனை, ஈஸ்வரா மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனை ஆகியவை சாா்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரூா் சம்பவம் போல இதுவரை நடந்ததில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சம்பவங்கள் இதுபோல நடைபெறுகிறது.
இந்த நெரிசல் சம்பவத்துக்கு நிகழ்ச்சியை நடத்தியவா்களுக்கும் பங்கு உண்டு. காவல் துறை தடுப்பு அமைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். தவெக தலைவா் பேருந்துகளில் பயணம் செய்து மக்களைச் சந்திக்கும் போது, போதிய இடவசதியில் பேச வேண்டும் அல்லது தொகுதி வாரியாக சென்று தொண்டா்களை சந்திக்கலாம்.
தவெக தொண்டா்களை முன்னதாகவே போலீஸாா் கட்டுப்படுத்தி இருக்கலாம். கூட்ட நெரிசலில் சிக்கியவா்கள் காலதாமதமாக சிகிச்சைக்கு சென்ால் பலா் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
நாம் தமிழா் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அண்மைகாலமாக அதிமுக தலைவா்களான எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கரூரில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி செலுத்தினா்.