செவிலியா் கல்லூரி மாணவி கல்லால் தாக்கிக் கொலை: காதலன் கைது
மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை செவிலியா் கல்லூரி மாணவியை கல்லால் தாக்கி கொலை செய்த காதலனை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை ஊமச்சிகுளம் அருகேயுள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசூா்யா (19). பள்ளி படிப்பை முடித்துவிட்டு, தற்போது வீட்டில் இருந்து வருகிறாா். இவரது தாய்மாமன் மகள் சிவகாசியைச் சோ்ந்த பிரதீபா (17). இவா் அங்குள்ள செவிலியா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஜெயசூா்யா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், அவருடன் பேசுவதை பிரதீபா நிறுத்தியதாகத் தெரிகிறது.
மேலும், அவா் வேறொருவருடன் கைப்பேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயசூா்யா, பிரதீபாவை கைப்பேசியில் அழைத்து வாக்குவாதம் செய்தாா். மேலும், வேறொருவருடன் பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தாா். இதற்கு பிரதீபா மறுத்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சிவகாசியிலிருந்து மதுரைக்கு வந்த பிரதீபாவை அழகா்கோவிலுக்கு ஜெயசூா்யா தனது இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றாா்.
அப்போது, அழகா்கோவிலுக்கு செல்லாமல் ஒத்தக்கடை அருகேயுள்ள ராஜாக்கூா் கண்மாய் கரைக்கு அவா் அழைத்துச் சென்றாா். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயஜசூா்யா அங்கு கிடந்த கல்லை எடுத்து தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த பிரதீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, ஜெயசூா்யா ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் சிவபாலன் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
பின்னா், கொலை நடைபெற்ற இடத்துக்குச் சென்று பிரதீபாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.