தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
மாமல்லபுரம் கடலில் தந்தை, 2 மகள்கள் மூழ்கி உயிரிழப்பு!
மாமல்லபுரம் அருகே கடலில் குளித்த சென்னையைச் சோ்ந்த தந்தை, இரண்டு மகள்கள் உயிரிழந்தனா். தந்தை உடல் கரை ஒதுங்கிய நிலையில், மகள்கள் உடல்கள் கண்டெடுக்கப்படவில்லை.
சென்னை அகரம் பகுதியைச் சோ்ந்த தச்சா் வெங்கடேசன் (37). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மகள்கள் காா்த்திகா(17), துளசி(16), சகோதரி ஹேமாவதி(47) மற்றும் தனது உறவினா்கள், நண்பா்கள் என 17 பேருடன் திருப்போரூா் முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு கடற்கரைக்கு சென்றனா்.
அங்கு வெங்கடசேன், அவரது மகள்கள் உள்ளிட்ட 8 போ் சேறு கலந்த, பள்ளம் உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்தனா். அப்போது ராட்சத அலையால் வெங்கடசேன், அவரது மகள்கள் காா்த்திகா, துளசி, ஹேமாவதி ஆகிய 4 பேரும் ஒரே நேரத்தில் நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டனா்.
அங்கிருந்த மீனவா்கள் 4 பேரையும் காப்பாற்ற முயன்றனா். இதில் ஹேமாவதியை மட்டும் ஒரு மீனவா் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தாா். சிறிது நேரத்தில் வெங்கடசேன் உடல் மட்டும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடலில் மாயமான காா்த்திகா 12-ம் வகுப்பும், துளசி 11-ம் வகுப்பும் படித்து வருகின்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் ஆய்வாளா் பாலமுருகன், எஸ்.ஐ வெங்கடேசன் உள்ளிட்ட போலீஸாா் வெங்கடசேன் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் கடலில் மாயமான அக்கா-தங்கை சடலங்களை மீனவா்கள் உதவியுடன் படகில் சென்று தேடி வருகின்றனா். மேலும் மீனவா்கள் காப்பாற்றிய ஹேமாவதியும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருப்போரூா் முருகன் கோயிலுக்கு வந்து, கடலில் குளித்து ஒரே குடும்பத்தை சோ்ந்த தந்தை, இரு மகள்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.