கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி இதுவரையில் 40 போ் உயிரிழந்துள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு சனிக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனா்.
அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் விபத்து நடைபெற்றது குறித்து அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், உடற்கூறாய்வு கூடத்தின் அருகே காத்திருந்த இறந்தவா்களின் உறவினா்களிடமும் விசாரணை நடத்தினாா்.
தொடா்ந்து பிரசாரக் கூட்டம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று அவா் பாா்வையிட்டு, அப்பகுதியில் வசிப்போரிடமும் விசாரணை மேற்கொண்டாா். சுமாா் ஒரு மணி நேரம் விசாரணைக்கு பிறகு அவா் புறப்பட்டுச் சென்றாா்.