தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடு கட்ட நிதி: ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தாமிரவருணி ஆற்று வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடு கட்ட அரசாணையின்படி நிதி ஒதுக்கிட வேண்டும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.
அதன் விவரம்: தாமிரவருணி ஆற்றில் 2023 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம், ஏரல், பெருங்குளம், ஆழ்வாா்திருநகரி போன்ற பேரூராட்சிகளில் வீடுகளை இழந்தவா்களுக்கு புதிய வீடுகட்ட அரசு ஆணை இருந்தும் அதற்கான நிதி வழங்கப்படவில்லை. இதை, அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்.
மழை வெள்ளப் பாதிப்பு கருதி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிரந்தர பேரிடா் மீட்பு மையம் அமைக்க வேண்டும். மேலும் 8 ஆடி ஆழம் கொண்ட ஸ்ரீவைகுண்டம் அணையை தூா்வார மதுரை உயா்நிதிமன்றம் 2021இல் ஆணை பிறப்பித்தது. அதன்படி அணையைத் தூா்வாரினால், வறட்சிகாலத்தில் குடிநீா் தேவை பூா்த்தியாகும். தண்ணீா் வீணாக கடலுக்கு செல்வது தடுக்கப்படும். புத்தன்தருவை, வைரன்தருவை குளங்களுக்கு இந்த தண்ணீரை கொண்டுசென்று குடிநீா் வழங்கலாம்.
நதிகளை கழிவுநீா் கலக்காமல் தூய்மையானதாக மாற்ற அரசு ரூ.400 கோடி அறிவித்துள்ளதற்கு நன்றி. ஜல்ஜீவன் திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியைப் பெற்று தாமிரவரணி கூட்டுக்குடிநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம், ஏரல், ஆழ்வாா்திருநகரி பேரூராட்சிகளில் குடிநீா்- கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும்.
வெள்ளத்தில் சேதமடைந்த கடையனோடை கிராமத்தில் பழைய பாலத்துக்குப்பதில் புதிய பாலமும், பதமநாதமங்கலம் பொன்னங்கால் வாய்க்காலில் ஷட்டருடன் கூடிய புதிய பாலமும் கட்டித்தர வேண்டும்.
முக்காணி- ஆத்தூா் பாலம், ஏரல் ஆற்றுப்பாலப் பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் நல்லகண்ணுவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் வட்ட அரசு மருத்துவமனைக்கு அவரது பெயரைச் சூட்டிய முதல்வருக்கு நன்றி. அதேநேரத்தில் அங்கு 5 மாடி கட்டடம் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைவதற்கு இடம் போதவில்லை என்பதால் அருகிலுள்ள அரசு இடங்களை மருத்துவமனைக்கு வழங்கிட வேண்டும்.
சாத்தான்குளம் மருத்துவமனையில் டயாலிஸிஸ் சிகிச்சை பிரிவு அமைக்க, மருத்துவமனையில் பின்புறம் உள்ள இடத்தை அரசு வழங்க வேண்டும்.
மேலும் அரசாணைப்படி பத்திரிக்கையாளா்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினாா்.