தாய், தந்தையை தாக்கிய மகன் கைது
சொத்தை பிரித்து தருமாறு தாய், தந்தையை தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை முத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவா் அழகப்பன் நகரில் உள்ள சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி பெரியநாச்சி. இவா்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், மனோகரன் தனது மனைவியுடன் வசித்து வரும் வீட்டை விற்று அதில் பங்கு தருமாறு இரு மூத்த மகன்கள் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக்கூறப்படுகிறது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மனோகரன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தாா். அப்போது அங்கு வந்த மூத்த மகன் முனீஸ்வரன், வீட்டை விற்று பங்கு தர வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டாா்.
இதை தந்தை மனோகரன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த முனீஸ்வரன், கட்டையால் மனோகரனைத் தாக்கினாா். இதைத் தடுக்க முயன்ற தாய் பெரியநாச்சியையும் தலையில் தாக்கினாா். இதனால், காயமடைந்த பெற்றோா் இருவரும் மதுரை அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து பெரியநாச்சி அளித்தப் புகாரின்பேரில், சுப்ரமணியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரனைக் கைது செய்தனா்.