கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் செய்த மனு: மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் புகழ் பெற்றது. பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தென் பகுதியில் உமையாண்டாா் குகைக் கோயிலும், 11 தீா்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இங்கு எந்தவிதமான உயிா்ப் பலியும் மேற்கொள்ளக் கூடாது.
திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தா் பாதுஷா தா்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த தா்காவின் சாா்பில் ஆடு, கோழிகளைப் பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இது சுப்பிரமணிய சுவாமி கோயில் பக்தா்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களைப் பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதேபோன்று, திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த மலையை சமணா் குன்று என அறிவிக்க வேண்டும். சிக்கந்தா் தா்காவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இந்த தா்காவை புதுப்பிக்கும் பணிக்கு காவல் துறையினா் தொந்தரவு தரக் கூடாது. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தக் கூடாது என வலியுறுத்தி, பலரும் வழக்குகள் தொடுத்தனா்.
இந்த வழக்குகள் அனைத்தும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: திருப்பரங்குன்றம் மலையின் பரப்புகளை அளவிடுவது தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இன்னும் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் அனைவரும் எழுத்துப்பூா்வ மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணை வருகிற 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வதற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றனா் நீதிபதிகள்.