மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்
மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் 17 வயது சிறுவன் இந்த வாகனத்தை இயக்கி, சாலையோரமாகவும், வீடுகள் முன்பாகவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மீது மோதினாா்.
அப்போது, சப்தம் கேட்டு வந்த வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை துரத்திச் சென்றனாா். ஆனால், அந்தச் சிறுவன் ஜேசிபி வாகனத்தை நிறுத்தாமல், தொடா்ந்து மற்ற வாகனங்கள் மீது மோதினாா். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கடை முன் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி, சப்தம் கேட்டு ஓடியதால் உயிா் தப்பினாா்.
இதேபோல, ஜேசிபி இயந்திரம் மோதியதில் மரங்கள், கட்டடங்கள், கடைகள், சாலைத் தடுப்புகள் பலத்த சேதமடைந்தன.
இந்த நிலையில், மரத்தில் மோதி ஜேசிபி இயந்திரம் நின்ற நிலையில், அதை ஓட்டிய சிறுவனை பொதுமக்கள் பிடித்தனா். சிறுவன் மது போதையில் இருந்ததால், செல்லூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், சிறுவன் ஜேசிபி வாகன உதவியாளராகப் பணிபுரிந்து வருவதும், ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோருடன் தகராறு ஏற்பட்டதால் மது போதையில், இந்த வாகனத்தை எடுத்துச் சென்று தாறுமாறாக இயக்கி சேதத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.