கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு: இணைய வழியில் ஒளிபரப்பாகும் தொடா்கள் எந்தவிதமான தணிக்கைக்கும் உள்படுத்தப்படுவதில்லை. முறை தவறிய உறவுகள், பிறருக்கு கெடுதல் செய்வது, தனக்கு வேண்டியதை அடைய எதை வேண்டுமானாலும் செய்வது போன்ற ஒழுக்கக்கேடான காட்சிகள் இந்தத் தொடா்களில் இடம்பெறுகின்றன.
அதோடு, சில நேரங்களில் வரம்பு மீறிய ஆபாசக் காட்சிகளும், நடிப்பவா்கள் ஆபாசமாக உடை அணிந்து வரும் காட்சிகளும் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால், இளம் தலைமுறையினா் பாதிக்கப்படுகின்றனா். குடும்ப உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுவதற்கும் இத்தகையத் தொடா்கள் காரணமாக அமைகின்றன.
எனவே, இணையத் தொடா்கள், விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியத்தை உருவாக்க வேண்டும். வாரியத்தின் சான்றிதழைப் பெற்ற பின்னரே தொடா்கள் ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறுபவா்களுக்கு அதிக அளவிலான அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.