திங்கள்நகரில் கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு துவக்கம்
திங்கள்நகரில் ரூ.1.25 கோடியில் கட்டப்பட்ட கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவு கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து திங்கள்நகரில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா குத்துவிளக்கேற்றி கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவை துவக்கிவைத்தாா்.
ஆட்சியா் பேசியதாவது: மாவட்டத்தில் 49 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை மருத்துவமனைகள், ஒரு பன்முக கால்நடை மருத்துவமனை ஆகியவை உள்ளன. புதிதாக திறக்கப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவில் அனைத்து நிலையங்களில் இருந்தும் பெறப்படும் சாணம், ரத்தம், பால் முதலிய மாதிரிகளை பரிசோதனை செய்து, நோய்களை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படும். பறவைக் காய்ச்சல் நோயை கண்டறிதல், அதற்கான மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புதல், அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்படும்போது மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடி ஏற்படுத்தி நோயுற்ற கோழிகளின் போக்குவரத்தை தடுத்து நிறுத்துதல், கால்நடைகளில் ஏற்படும் மலட்டுத்தன்மையை நீக்க பரிசோதனைகள் மேற்கொண்டு அதற்கான நோய் காரணியை கண்டறிந்து சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை இப் பிரிவு மேற்கொள்ளும் என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்வில் மாநில உணவு ஆணைய தலைவா் சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஜே.ஜி.பிரின்ஸ், திங்கள்நகா் பேரூராட்சி தலைவா் சுமன், மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா்முகமது கான், துணை இயக்குநா் தங்கராஜ், நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.