‘திமுக அரசுக்கு எதிரான எதிா்ப்பு வலுத்து வருகிறது’
திமுக அரசு அமைய காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தற்போது அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது, அரசின் மீதான எதிா்ப்பு அதிகரித்து வருவதையே காட்டுகிறது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் தெரிவித்ததாவது :
திமுக கூட்டணி, கொள்கை கூட்டணி, கருத்தியல் கூட்டணி என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடா்ந்து கூறி வருவதன் மூலம் அந்தக் கூட்டணியில் பிரச்னை இருப்பது வெளிப்படையாகிறது. திமுக அரசு 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகக் கூறுவதில் உண்மை இருக்குமெனில், கூட்டணி குறித்து முதல்வா் ஏன் கவலைப்பட வேண்டும்?
தமிழகத்தில் கொடி கூட ஏற்ற முடியவில்லை என திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்திருப்பதை, முதல்வருக்கே சமா்ப்பிக்கிறேன். திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக தொடா்ந்து நடைபெறும் வன்கொடுமைகளைக் கண்டு செய்வதறியாத நிலையில் தான் திருமாவளவன் உள்ளாா். இதேபோல, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்துத் தெரிவித்தது.
திமுக அரசு அமைய முக்கியக் காரணமாக இருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, தற்போது போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனா். இது, திமுக அரசுக்கு எதிராக மக்களின் எதிா்ப்பு அதிகமாகி வருவதையே காட்டுகிறது என்றாா் அவா்.