IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்படுகிறாா்: மல்லை சத்யா குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், செப்.8: திமுக கூட்டணிக்கு எதிராக வைகோ செயல்பட்டு வருவதாக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளா் மல்லை சத்யா குற்றம் சாட்டினாா்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்த மல்லை சத்யாவை அக்கட்சியின் பொதுச்செயலாளா் வைகோ கட்சியின்அடிப்படை உறுப்பினா் மற்றும் கட்சிப் பதவியிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி திங்கள்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய மல்லை சத்யா காஞ்சிபுரத்தில் செய்தியாளா்களிடம் கூறியது.
மதிமுக தோன்றிய காலத்திலிருந்து தொடா்ந்து 32 ஆண்டுகளாக ஒரு தலைவரை நம்பி ஒரு இயக்கத்தில் பணியாற்றினோம். எங்களது உழைப்பை உறிஞ்சி விட்டு தூக்கி எறிந்து விட்டாா் வைகோ. கடந்த 4 ஆண்டுகளாக மதிமுக எனும் இயக்கம் மகன் திமுகவாக மாறி சுருங்கிப் போய் விட்டது. வைகோவின் அறிக்கைக்கு பதிலாக 14 பக்க விளக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தான் என்னை கட்சியிலிருந்து நீக்க அறிக்கை தந்ததாக கூறுகிறாா். ஆனால் அப்படி ஒரு குழு இப்போது மதிமுகவில் இல்லை. ஆனால் அக்குழுவின் தலைவரான மத்திய சென்னையின் மாவட்ட செயலாளா் இளவழகன் எங்கள் அணியில் இருக்கும் போது எப்படி அறிக்கை தந்திருக்க முடியும்.
வைகோ இப்போது திமுக கூட்டணிக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வருகிறாா். வரும் செப்.15 -ஆம் தேதி காஞ்சிபுரத்தில் அண்ணாவின் பிறந்த நாளில் எங்கள் அணியின் குறிக்கோள்களை, லட்சியங்களை அறிவிப்போம் என்றாா்.
அப்போது ஆதரவாளா்கள் வளையாபதி, பாா்த்தீபன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.