சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி
காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவின்படி, சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிஎஸ்பி சங்கா் கணேஷ் நெஞ்சுவலி காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் டிஎஸ்பி சங்கா்கணேஷை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தாா். இந்த நிலையில், அவா் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் கூறுகையில், காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்மீது முறையாக வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம். டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்டது சரியானதாக இல்லை. இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பே டிஎஸ்பி-யை கைது செய்ய உத்தரவிட்டதற்கு காரணமாக இருக்கும் எனத் தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.