BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
திமுக கூட்டணி : அதிகரிக்கும் தோழமைகளின் கண்டிப்புகளும் பின்னணியும்!
தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. சமீபகாலமாக திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இடையில் முரண் நிலவி வருகிறது. சமீபத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சித்தம்பரம், "சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகள் தி.மு.க-வுக்கு கிடைப்பதற்குக் காங்கிரஸ்தான் முக்கிய காரணம். ஆனால் ஒவ்வொருமுறையும் சீட் கொடுப்பதில் கெடுபிடி செய்கிறார்கள்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியின் பங்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் 2026 தேர்தலுக்கு அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்" என பேசியிருந்தார்.
இதற்கு தி.மு.க அமைச்சர் ரகுபதி, "எங்களது முதல்வர் ஸ்டாலின் ஆற்றியிருக்கும் சிறப்பான பணிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கும். யாருடைய தயவில் ஆட்சியமைக்க வேண்டிய சூழல் எங்களுக்கு வராது" என எதிர்வினையாற்றினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வி.சி.க தலைவர் திருமாவளவனின் சமூக வலைதளப்பாக்கத்தில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்" என பேசிய அவரின் பழைய உரை பகிரப்பட்டது. பிறகு அதை நீக்கினார்கள். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழகத்தை பொறுத்தவரை வித்தியாசமான சூழல் நிலவுகிறது. தி.மு.க, அ.தி.மு.க ஆகியவை பெரிய கட்சிகளாக இருந்தாலும் கூட கூட்டணி வைக்காமல் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதுதான் தற்போதைய நிலை. இரு கட்சிகளும் தனித்து நின்று வெற்றிபெறுவதோ, ஆட்சி அமைப்பதோ சாத்தியம் இல்லை.
மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பதை வேறு மாதிரி பார்க்கிறோம். ஆட்சி அமைந்ததும் இரண்டு அமைச்சர் பதவி வாங்குவதை மட்டும் அதிகார பகிர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. தேர்தலுக்கு கொள்கை ரீதியான திட்டத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் கூட்டணியில் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அத்திட்டத்தை செயல்படுத்தும் கூட்டணி அமைய வேண்டும். இதுதான் முழுமையான கூட்டணி ஆட்சி. மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளாவில் அதைத்தான் செயல்படுத்தினோம். இங்கும் அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார். இந்த பேச்சுக்குள் மீண்டும் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில்தான் தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் தத்தெடுக்கும் முடிவுக்கு தி.மு.க கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "அடுத்த கல்வியாண்டில் 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதன் நோக்கம் படிப்படியாக அரசுப்பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும். அரசுப்பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும். அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசே அதற்கான கூடுதல் நிதியை ஒதுக்கி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு மாதம் ரூ.1000ம் வழங்கி ஊக்கம் அளித்து வருகிறது. இதனால் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, திறன் பெற்ற மனிதவளம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தத்து கொடுக்கப்படும் என்பது ஊரகப் பகுதியில் அடித்தட்டு மக்களின் கட்டணமில்லா கல்வி பெறும் வாய்ப்பை பறிக்கும் பேரபாயம் கொண்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
ஊரகப்பகுதிகளில் இயங்கி வரும் ஆரம்பப் பள்ளிகளில் பெரும்பாலும் பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவு மாணவர்கள் தான் பயின்று வருகின்றனர். இங்கு பல வகுப்புகளுக்கு சேர்ந்து ஒரு ஆசிரியர் என்ற முறையில் கற்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகின்றது. இந்தச் சூழலில் அரசுப் பள்ளிகளில் 500 பள்ளிகளை தனியாரிடம் வழங்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, கைவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார். பிறகு தமிழக அரசு, 'தனியார் தத்தெடுக்கவில்லை' என அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பும் அண்ணா பல்கலை விவகாரம், சாம்சங் விவகாரம் என தொடர்ச்சியாக தி.மு.க அரசுக்கு எதிராக அதன் கூட்டணி கட்சிகளின் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அதிமுக போராட்டத்தின் முக்கிய கோஷமே, `யார் அந்த சார்?’ என்பது தான். யார் அந்த சார் அன்பது குறித்து தமிழக அரசு விசாரிக்க வேண்டும் என கூட்டணியில் இருக்கும் திருமாவளவனும் சொல்லி இருக்கிறார்.
இது வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து சில அரசியல் ஆர்வலர்களிடையே பேசுகையில், ``திமுக அரசின் நிர்வாகத்தில் சில சிக்கல்கள் எழும் போது கூட்டணி கட்சிகள் மீதும், `வேடிக்கை பார்ப்பதாக’ விமர்சனம் வைக்கப்படும். அதனை தவிர்க்க கூட்டணி கட்சிகளும் முக்கிய வழக்குகளில் தங்களின் கண்டனத்தை தெரிவிப்பார்கள். தமிழ்நாட்டில் கூட்டணியின் முக்கியத்துவத்தை பெரிய கட்சிகள் அனைத்தும் அறிந்து தான் உள்ளன. அதிமுக கூட வலுவான கூட்டணியை அமைப்போம் என்று தான் சொல்லி வருகிறார்கள். புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள விஜய்யும், ஆட்சியில் பங்கு என கூட்டணி கணக்கோடு தான் தொடங்கினார். திமுக-வுக்கும் இது தெரியும். கூட்டணியாக வலுவாக உள்ள திமுக தரப்பு கூட்டணியை அத்தனை எளிதில் விட்டு விடாது. பாஜக எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து கூட்டணியை தக்கவைக்கவே முயற்சிக்கும். ” என்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், "திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நியாயமான விஷயங்களுக்குதான் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்படி செய்யவில்லையென்றால் தி.மு.க ஆட்சியில் நடக்கும் தவறுகளையெல்லாம் அதன் கூட்டணி கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன என்கிற விமர்சனத்தை சந்திக்கும் நிலை ஏற்படும். ஆனால் இதன் காரணமாக கூட்டணியில் பாதிப்பு ஏற்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் பா.ஜ.கவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக 'இந்தியா' கூட்டணி என்கிற ஒன்றை குடையின் கீழ் இணைத்துள்ளனர். எனவே தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் யார், யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது தெரியும்" என்றார்.