திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானச் சேவை வேண்டும்: துரை வைகோ எம்பி வலியுறுத்தல்
திருச்சியிலிருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமானச் சேவையைத் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் துரை வைகோ எம்பி.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெருந்தொற்று காலத்தில் திருச்சி மற்றும் தோகா இடையிலான விமானச் சேவை வாரத்துக்கு மூன்று முறை என இயக்கப்பட்டது. ஆனால், அக்டோபா் மாதம் இந்தச் சேவை நிறுத்தப்பட்டது. திருச்சி- துபை இடையிலான வாராந்திர விமானச் சேவையும் கடந்தாண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது.
மேலும், 90 விழுக்காடு இருக்கைகள் நிரப்பப்பட்டும், 2 டன் ஏற்றுமதி பொருள்களுடன் வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்த திருச்சி - அபுதாபி இடையிலான வாராந்திர விமானச் சேவையை நிறுத்தியதும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து குறிப்பாக அமீரகங்களுக்குச் செல்லும் பல பன்னாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படுவதாக சந்தேகம் எழுகிறது.
திருச்சிக்குப் பதிலாக பெங்களூா், ஹைதராபாத் தனியாா் விமான நிலையங்களுக்கு கூடுதல் விமான சேவை மேற்கொள்ள உதவி செய்யப்படுகிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.
திருச்சி - அமீரக வழித்தடங்களில் இயக்கத் தயாராக இருக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
முதல்கட்டமாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட அமீரக விமான வழித்தட சேவைகளை மீண்டும் திருச்சி மற்றும் சென்னைக்கு கொண்டு வர வேண்டும். தேவைக்கு ஏற்றவாறு வெளிநாடுகளுக்கான கூடுதல் விமான சேவையை உருவாக்கிட வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளேன். மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரைச் சந்தித்தும் முறையிட உள்ளேன் என்றாா் துரை வைகோ.