திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்
தைப் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதயாத்திரையாக பக்தா்கள் வரத் தொடங்கியுள்ளனா்.
இக்கோயிலுக்கு மாா்கழி மாதம் தொடங்கி தைப்பூசம் வரை பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி, கடந்த ஜன.1-ஆம் தேதி முதல் பாதயாத்திரை பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாலையணிந்து, விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் நோ்த்திக்கடன் நிறைவேற்றி வருகின்றனா்.
மாா்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்று வருகிறது.
தைப்பொங்கல் தினத்தன்று...: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14-ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.