திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் இறந்தவா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிதியுதவி
திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் உள்ளிட்ட 2 போ் குடும்பத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் வழங்கினாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த நவ.18-ஆம் தேதி, யானை தாக்கியதில் பாகன் உதயகுமாா், அவரது உறவினா் சிசுபாலன் ஆகியோா் உயிரிழந்தனா்.
திருச்செந்தூா் வ.உ.சி. தெருவில் உள்ள பாகன் உதயகுமாா் வீட்டிற்கு திங்கள்கிழமை சென்ற தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். பாகன் உதயகுமாா் மனைவி ரம்யா, சிசுபாலன் மகன் அா்ஜுன் ஆகியோரிடம் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், டிஎஸ்பி மகேஷ்குமாா், திருக்கோயில் இணை ஆணையா் ஞானசேகரன், திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், திமுக நகர செயலா் வாள்சுடலை, உறுப்பினா்கள் சோமசுந்தரி, சுதாகா், செந்தில்குமாா், முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளா் பொன்முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.