திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்
புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக சனிப்பெயர்ச்சியின்போது வெளிநாடுவாழ் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வந்து தரிசித்துச் செல்வார்கள். நேரில் வர முடியாத பக்தர்கள் பூஜை மற்றும் பரிகாரங்களுக்காக கோயில் இணையத்தளத்தில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்வார்கள். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் அவர்களது பெயரில் பூஜைகள் செய்யப்பட்டு, கோயில் சார்பில் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

ஆனால் சமீபநாட்களாக பூஜைகள் செய்வதற்கு கட்டணம் செலுத்தியும், தங்களுக்கு பிரசாதம் வரவில்லை என்று பக்தர்கள் தொடர்ச்சியாக கோயில் நிர்வாகத்திற்கு புகார் அனுப்பி வந்தனர். அவர்களின் புகார்களையும், அவர்கள் கட்டணம் செலுத்தியதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்த கோயில் நிர்வாகம், அப்படி எந்தக் கட்டணமும் வரவில்லை என்று கூறியிருக்கிறது. அத்துடன் பக்தர்கள் கொடுத்த ஆவணங்களுடன் சைபர் கிரைம் போலீஸிலும் புகாரளித்தது கோயில் நிர்வாகம். அதையடுத்து விசாரணையில் இறங்கிய சைபர் கிரைம் போலீஸார், கோயிலின் இணையத்தளத்தை ஆய்வு செய்தனர்.
போலி இணையதளம்
அப்போதுதான் கோயில் பெயரில் வேறொரு போலி இணையதளம் செயல்பட்டு வருவது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து கோயிலின் மேலாளர் சீனிவாசனிடம் புகாரைப் பெற்ற திருநள்ளாறு போலீஸார், போலி இணையத்தளத்தை இயக்குபவர்கள் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அதே கோயிலில் அர்ச்சகராக இருக்கும் வெங்கடேஸ்வர குருக்கள் இதில் சம்மந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரை வளைத்து விசாரித்தபோது, பெங்களூருவைச் சேர்ந்த ஜனனி பரத் என்ற பெண்ணின் உதவியுடன் பல ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. தொடர்ந்து வெங்கடேஸ்வர குருக்களை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜனனி பரத்தையும் கைது செய்திருக்கிறார்கள்.

இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ``கோயிலுக்கு நேரில் வரமுடியாத மற்றும் வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களுக்காக, கட்டணத்தின் அடிப்படையில் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கோயிலின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் பல ஆண்டுகளாக இது நடைமுறையில் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக அதன் மூலம் கோயிலுக்கு வரும் வருவாய் குறைந்ததுடன், தங்களுக்கு பிரசாதம் வரவில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அப்படித்தான் இந்த மோசடி வெளிவந்திருக்கிறது. போலி இணையத்தளம் மூலம் பணத்தை வசூல் செய்வது ஜனனியின் பணி. அதற்கான பிரசாதத்தை அனுப்பி வைப்பதை வெங்கடேஸ்வர குருக்கள் செய்திருக்கிறார். இப்படி பல ஆண்டுகளாக கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கொடுத்தனர்.
Vikatan Play
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play