மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்; குழம்பிய போலீஸ்... படம் வரைந்து காட்டிக்கொடுத்த மகள்!
உத்தரப்பிரதேசத்தில், மனைவியைக் கணவன் கொலைசெய்து நாடகமாடிய சம்பவத்தில், மகளால் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, ஜான்சியில் கோட்வாலி பகுதிக்கு உட்பட்ட பஞ்சவடி ஷிவ் பரிவார் காலனியில், சோனாலி (27) என்பவர் தனது வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். இது தொடர்பாகத் தகவல் பெற்ற போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மறுபக்கம், உயிரிழந்த பெண்ணின் மாமியார், தனது மருமகள் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். இருப்பினும், போலீஸாருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான், சோனாலி - சந்தீப்பின் மகள் தர்ஷிதா, தன்னுடைய அப்பாதான் அம்மாவைக் கொலைசெய்ததாகப் படம் வரைந்து காண்பித்திருக்கிறார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மகள் தர்ஷிதா, ``அப்பாதான் அம்மாவை அடித்துக் கொன்றார். அம்மாவைத் தூக்கிலிட்டு கல்லால் தலையில் அடித்தார். பிறகு உடலை இறக்கி சாக்குப் பையில் போட்டார். நான் ஏற்கெனவே, என் அம்மாவை அடித்தால் கையை முறித்துவிடுவேன் என்று அப்பாவிடம் கூறியிருக்கிறேன். ஆனாலும், அவர் என் அம்மாவை அடித்துக்கொண்டே இருந்தார்." என்று தெரிவித்தார்.

பின்னர், சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதி கூறுகையில், ``2019-ல் எனது மகளுக்கும் சந்தீப்புக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தன்று வரதட்சணையாக ரூ. 20 லட்சம் கொடுத்தேன். ஆனால், அதற்கடுத்த சில நாள்களிலேயே சந்தீப்பும், அவரது குடும்பத்தினரும் கார் வேண்டும் என்று கேட்டனர். கார் வாங்குவது என்னுடைய சக்திக்கு மீறியது என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்குப் பிறகு இவர்கள் என் மகளை அடிக்கத் தொடங்கினர். இதுதொடர்பாக காவல்துறை வரை சென்று பேசி சமாதானம் ஆனோம்.
அதன் பிறகு, சந்தீப் குழந்தை வேண்டுமென்று இருந்தார். ஆனால், பெண் குழந்தை பிறந்ததால் எனது மகளையும், பேத்தியையும் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டனர். அதனால், எனது மகளையும், பேத்தியையும் எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்ட பிறகு, ஒரு மாதம் கழித்துதான் எங்கள் வீட்டுக்கு அவர்கள் வந்தனர். இப்படியிருக்க, எனது மகளின் உடல்நிலை மோசமாக இருப்பதாக இன்று (பிப்ரவரி 17) காலையில் எனக்கு போன் வந்தது. அடுத்த சில நிமிடங்களில், என் மகள் தூக்குபோட்டுவிட்டதாக மற்றொரு அழைப்பு வந்தது. நான் அங்கு சென்றபோதுதான் அவள் இறந்துவிட்டதை அறிந்தேன்." என்று கூறினார்.

பிறகு, இது குறித்து பேசிய கோட்வாலி நகர காவல்துறை அதிகாரி ராம்வீர் சிங், ``கணவர் வீட்டில் அவர் மர்மமான முறையில் பெண் இறந்தது குறித்து எங்களுக்கு அழைப்பு வந்தது. இது கொலை என உயிரிழந்தவரின் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். வழக்கை நாங்கள் விசாரித்து வருகிறோம். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதால், அதன் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம்." என்று தெரிவித்தார்.