ஆவடி: "பங்குச் சந்தையில போட்டா..." - இன்ஜினீயரிடம் ரூ.1.5 கோடி மோசடி; போலீஸிடம் சிக்கியது எப்படி?
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (55). சிவில் இன்ஜினீயரான இவரின் வாட்ஸ்அப் நம்பருக்குப் பங்குச் சந்தை முதலீடு தொடர்பான லின்க் ஒன்று வந்தது. அந்த லிங்கை ஜெயராமன் ஓப்பன் செய்தபோது அதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பணம் இரட்டிப்பாகும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதனால் ஜெயராமனும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பினார்.
இதையடுத்து பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக ஜெயராமனிடம் சிலர் பேசினர். பின்னர் ஜெயராமனின் செல்போன் நம்பரைப் பங்குச் சந்தை முதலீடு திட்டம் தொடர்பான வாட்ஸ்அப் குரூப்பில் அவர்கள் சேர்த்தனர். அந்த வாட்ஸ்அப் குரூப்பில் தினமும், "நான் இவ்வளவு முதலீடு செய்தேன். அதற்கு இவ்வளவு பணம் லாபமாகக் கிடைத்தது" என மெசேஜ்கள் வந்து குவிந்தன. அதைப் பார்த்த ஜெயராமனும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார்.

ஜெயராமனுக்கும் லாபம் கிடைத்ததாக மெசேஜ்கள் வரத் தொடங்கின. அதனால் அவரும் மகிழ்ச்சியடைந்து அடுத்டுத்து முதலீடுகளைத் தொடங்கினார். ஜெயராமன் மட்டும் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை முதலீடு செய்தார். அதற்கும் பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்ததாக மெசேஜ்கள் ஜெயராமனுக்கு வந்தன. ஆனால் அந்தப் பணத்தை ஜெயராமனால் எடுக்க முடியவில்லை. பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக ஜெயராமனுக்கு ஆலோசனை வழங்கியவர்களின் செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் ஆனது. அதன்பிறகே ஜெயராமன், ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
இதையடுத்து ஆதாரங்களுடன் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் சைபர் க்ரைம் பிரிவில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீஸார் ஜெயராமன் அனுப்பிய பணம் எந்த வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது என விசாரித்தனர். அப்போது சென்னையில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் சென்றிருப்பது தெரியவந்தது. அந்த வங்கிக் கணக்கு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் பெயரிலிருந்தது.
உடனடியாக அஜித்குமாரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இவர் ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வருவது தெரியவந்தது. இவரின் பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கிய பங்குச் சந்தை முதலீடு மோசடி கும்பல், தமிழகத்தில் பலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இந்த பண மோசடியில் அஜித்குமாருக்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாக சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் வங்கிக் கணக்குக்கும் மோசடி பணம் சென்றிருப்பது தெரியவந்தது. அதனால் பிரகாஷை போலீஸார் கைது செய்தனர்.
இவர், பி.ஏ படித்துவிட்டு சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறார். இதையடுத்து அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். அவர்களை ஆவடி மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறுகையில், ``சைபர் க்ரைம் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் இன்னமும் இந்த மோசடி தொடர்கதையாகவே உள்ளது. ஜெயராமனைத் தொடர்பு கொண்ட பங்குச் சந்தை முதலீடு மோசடி கும்பல், பணத்தாசைக் காட்டி ஒன்றரைக் கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறார்கள். இந்த வழக்குப் பின்னணியில் பெரிய நெட்வொர்க் உள்ளது. அவர்களைக் கைது செய்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். தற்போது கைதாகியிருக்கும் பிரகாஷ், அஜித்குமார் ஆகிய இருவரும் தங்களின் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பலுக்குக் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play